சென்னை: தமிழகத்தில் இருந்து திடீரென 1.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் பணி செய்து வருகின்றனர். பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பமாக தமிழகம் வந்து பணியாற்றி வருகின்றனர்.
தங்களின் மாநிலங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் தமிழகம் வந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வேலை செய்து வருகின்றனர். கட்டுமான தொழில், பண்ணை தொழில், தொழிற்சாலை பணி, பஞ்சுமிட்டாய், பானி பூரி விற்பது, ஓட்டல் பணி என பல வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தற்போதைய சூழலில் பல லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே தான் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பணி செய்வது குறித்து அவ்வப்போது விவாதமும், சர்ச்சையும் ஏற்படும். தமிழர்களின் வேலைவாய்ப்புகளை வடமாநில தொழிலாளர்கள் பறிப்பதாகவும், அவர்கள் தமிழகத்திலேயே ரேஷன் கார்டு பெற்று குடியேறுவது தமிழர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக ஒருதரப்பு குற்றம்சாட்டி வருகிறது.
மாறாக இன்னொரு தரப்போ சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் அவர்கள் தமிழ்நாட்டில் வந்து வேலை செய்வதில் எந்த தவறும் இல்லை என ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் நூற்பாலைகளில் வேலை செய்து வந்த 1.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை காலி செய்து மூட்டை, முடிச்சுகளுடன் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தமிழகத்தில் அதிகளவில் நூற்பாலைகள் உள்ளன. நடுத்தர பிரிவில் 1000 நூற்பாலைகள் சிறிய பிரிவில் 300 நூற்பாலைகள், ஓபன் எண்ட் பிரிவில் 600 நூற்பாலைகள் உள்ளன. இந்த நூற்பாலைகள் மாநிலம் முழுவதும் பரவி உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போல் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்போது பல நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மின்கட்டண உயர்வு, நூற்பாலைகளுக்கு சலுகை இல்லாதது உள்ளிட்டவற்றால் நிலைமையை சமாளிக்க முடியாமல் நூற்பாலைகளை அதன் உரிமையாளர்கள் மூடியுள்ளனர். இதனால் சுமார் 1.50 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகள் சங்கத் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறுகையில், ”தமிழகத்தில் உள்ள 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். மின் கட்டண உயர்வு, கழிவுப் பஞ்சு விலை தொடர்ந்து அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் பல ஓஇ நூற்பாலைகள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் 50 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பி உள்ளனர்” என்றார்.
அதேபோல், தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் சங்கத்தின் (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் கூறுகையில், “தமிழகத்தில் 300 சிறு நூற்பாலைகளில் 50 சதவீதம் வரை மூடப்பட்டுள்ளது. 1,000 நடுத்தர நூற்பாலைகளில் 20 சதவீதம் மூடப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வேலையிழந்து வெளியேறியுள்ளனர்” என்றார்.
இதற்கிடையே தான் நூற்பாலைகளை மீண்டும் செயல்பட வைக்க தமிழக அரசு மின்கட்டண குறைப்பு உள்பட சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தொழில்துறையில் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லாவிட்டால் தமிழகத்தில் தமிழகத்தில் ஜவுளித் தொழில் புத்துயிர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.