சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஒலிம்பிக் 2024’ தொடர் நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த சூழலில் ஈட்டி எறிதலில் உலக சாம்பியானகவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கமும் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக் குறித்து பேசியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான எனது பயிற்சியை தொடங்க உள்ளேன். அதற்காக நான் வெளிநாடு செல்கிறேன். நாட்டுக்காக பதக்கம் வெல்ல நூறு சதவீதம் களத்தில் எனது முயற்சியை கொடுப்பேன் என நீரஜ் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, இந்தியாவில் தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். கென்யா போன்ற நாடுகள் சர்வதேச அளவிலான தடகள போட்டிகளை நடத்தி வரும் நிலையில், இந்தியாவும் சர்வதேச தடகள போட்டிகளை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.