Breaking News
Home / செய்திகள் / முடங்கி கிடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்.. தலைவர், செயலர் பதவி காலி.. அரசுக்கு முக்கிய கோரிக்கை!

முடங்கி கிடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்.. தலைவர், செயலர் பதவி காலி.. அரசுக்கு முக்கிய கோரிக்கை!

சென்னை: முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சியை மீட்டெடுத்து பணிகளை துரிதப்படுத்த, தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்து வந்த உமாமகேஸ்வரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. தற்போது உமாமகேஸ்வரி மாற்றப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி செயலாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், உறுப்பினர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி அமைப்பே, தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகளையும், பணியாளர்களையும் தேர்ந்தெடுத்து வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தலைவர், செயலாளர் மற்றும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டிய அமைப்பை அரசு முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் இல்லை. 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவரான முனியநாதன் என்பவர் தான் இப்போது பொறுப்புத் தலைவராக இருக்கிறார். அவரும், மற்றொரு மூத்த உறுப்பினருமான முனைவர் ஜோதி சிவஞானமும் முறையே வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஓய்வு பெறவுள்ளனர். அதன்பின் இரு உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த கா.பாலச்சந்திரன் கடந்த 09.06.2022 அன்று ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து மூத்த உறுப்பினர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகியோர் கடந்த 19.04.2023-ஆம் நாளுடன் ஓய்வு பெற்றனர். ஆணையத்தில் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில், 6 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிலும் இருவர் ஓய்வு பெற்று விட்ட சூழலில் அவர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்; புதிய தலைவரும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான முறையான நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தொடங்கக்கூட இல்லை.

தங்களுக்கு சாதகமானவர்களை அந்தப் பொறுப்புகளில் நியமிக்க, விதிகளுக்கு மாறாகவும், நடைமுறைகளுக்கு எதிராகவும் அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட பொறுப்பு ஆணையத்தின் செயலாளர் பொறுப்பு ஆகும்.

23.06.2021 ஆம் நாள் முதல் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த உமாமகேஸ்வரி அவர்கள் கடந்த நவம்பர் 21-ஆம் நாள் வணிகவரித்துறை இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், அதற்கான முறையான அறிவிப்பு கூட இதுவரை வெளியிடப்படவில்லை. மற்றொருபுறம் ஆணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வரும் அஜய் யாதவ் விடுப்பில் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக தலை, மூளை, இதயம், கை, கால்கள் என இயக்கத்திற்கான எந்த உறுப்புகளுமே இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது ஆணையம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மிக முக்கியமான அரசியலமைப்பு சட்ட நிறுவனம் ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் 315-ஆவது பிரிவின்படி உருவாக்கப்பட்டது. ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 315 முதல் 320 வரையிலான பிரிவுகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் கடமைகள் செவ்வனே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அப்பணிகள் எதையுமே செய்ய முடியாமல் பணியாளர் தேர்வாணையம் முடங்கிக் கிடக்கிறது.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீர் மாற்றம்: தலைமை செயலர் அதிரடி உத்தரவு! தலைவர் பதவியும் காலி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் எந்த அளவுக்கு முடங்கிக் கிடக்கின்றன என்பதற்கு சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க 2022-ஆம் ஆண்டில் 37 அறிவிக்கைகள், 2019-ஆம் ஆண்டில் 34 அறிவிக்கைகள், 2018-ஆம் ஆண்டில் 39 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், 2023-ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இதுவரை 19 ஆள் தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே.

தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத் தான் இருக்கக்கூடும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அளவுக்கு முடங்கிக் கிடப்பது தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அரசு நிர்வாகமும் முடங்கிவிடக் கூடும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியானவர்களை முறைப்படி நியமிக்க வேண்டும். ஆணையத்திற்கு புதிய செயலாளரையும் உடனே நியமித்து தேர்வாணையம் முழு அளவில் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *