சென்னை: ரயில் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெற்கு ரயில்வேயில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நேற்று சென்னை வந்தார். சென்னை ஐசிஎஃப் ஆலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். வந்தே பாரத் ரயில் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் ஐசிஎஃப் பணியாளர்களின் திறனை அவர் பாராட்டினார்.
இந்த ஆய்வின் போது, ஐசிஎஃப் பொதுமேலாளர் மால்யா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதேபோல, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நடக்கும் 4-வது புதிய ரயில் பாதை பணிகள், வேளச்சேரி – பரங்கிமலை மேம்பால ரயில் இணைப்பு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், தெற்கு ரயில்வேயில் நடக்கும் பல்வேறு ரயில் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் மற்றும் கேரளாவில் நடைபெறும் ரயில் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ரயில்வே அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
ரயில் திட்டப் பணிகளைத் தாமதம் இன்றி விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்குஅவர் அறிவுறுத்தினார். இதையடுத்து, ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன் பாலம், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். கன்னியாகுமரி ரயில் நிலையம் மேம்பாட்டுப் பணிகள், மதுரை – திருநெல்வேலி, திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே நடந்து வரும் இரட்டை பாதை பணிகளை நாளை ஆய்வு மேற்கொள்கிறார். இதேபோல், வரும் 19-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ரயில் நிலையங்கள் மேம்பாட்டுப் பணிகள், இரட்டை பாதை பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.