சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு, நீட்தேர்வு, முல்லைப்பெரியாறு, மேகேதாட்டு விவகாரங்கள் தொடர்பாக சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக நாளை சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறப்பு நிகழ்வுகள், தேவைகளின் அடிப்படையில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், அவசர கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2011 டிசம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய அரசு படைகளை அனுப்ப கோரியும், அப்போதைய மத்திய அரசின் மவுனத்தை கண்டித்தும் சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
* கடந்த 2013 அக்.24-ம் தேதி இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு, மாற்றாக சட்டப்பேரவையில் மாலை நேரத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
* 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் மாலை நேரத்தில் நடத்தப்பட்டு, மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளித்ததை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கடந்த 2022 பிப்.8-ம் தேதி, ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில்தான் நாளை, மீண்டும் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஆளுநர் திருப்பி அனுப்பிய பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.