சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகமாகியுள்ளது. இதன் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதன்படி, நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் மதுரை மண்டலத்தில் தான் மது விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளது. நவம்பர் 11-ம் தேதி அதிகபட்சமாக மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில் ரூ.48.12 கோடி, கோவையில் 40.20 கோடி, திருச்சியில் 40.02 கோடி மற்றும் சேலத்தில் 39.78 கோடி என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே தீபாவளி பண்டிகையான நவம்பர் 12-ம் தேதி, அதிகபட்சமாக திருச்சியில் ரூ.55.60, சென்னையில் 52.98 கோடி, மதுரையில் 51.97 கோடி, சேலத்தில் 46.62 கோடி, கோவையில் 39.61 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டத்திலும், தீபாவளி அன்று திருச்சி மண்டலத்தித்திலும் அதிக விற்பனை நடந்துள்ளது. எனினும், இரண்டு நாட்களிலும் சேர்த்து மதுரையில் மட்டும் ரூ.104.7 கோடி என்ற அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக சென்னையில் ரூ.101.1 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது. இன்றும் தமிழகத்தில் பொது விடுமுறை என்பதால் மது விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.