சென்னை: “எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என்று புகழாரம் சூட்டிவந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக குறித்து மீண்டும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடந்த வருடம், மூத்த தலைவர்கள், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.. மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆக மொத்தம் 5 பேர் தமிழக பாஜக பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதிருப்திகள்: ஆனால், அந்த பாஜக நிர்வாகிகள் பட்டியலில் காயத்ரி ரகுராமின் பெயர் இல்லை. கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அப்பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
தன்னை பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என காயத்ரி ரகுராம் பெரிதும் நம்பி இருந்த நிலையில், அதிரடி மாற்றத்தை கொண்டு வந்திருந்தார் மாநில தலைவர் அண்ணாமலை. அப்போதிருந்து இப்போதுவரை, அண்ணாமலையை அவ்வப்போது வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறார். தமிழக பாஜகவை விமர்சிப்பதையும் நிறுத்தவில்லை.
பிரதமர் மோடி: அண்ணாமலை மீதான காழ்ப்புணர்ச்சியை, தன்னுடைய ட்வீட்டில் தொடர்ந்து பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்று என்றாலும், பிரதமர் மோடி குறித்த கருத்தை வெளியிட்டுள்ளதுதான், தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
காயத்ரி பேசும்போது, தமிழ்நாட்டில் மோடியின் பெயரால் பாஜக சற்று வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பாஜக வளரவில்லை என்பது தான் உண்மை. எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அதிமுக நிச்சயம் வளரும். கடந்த தேர்தலில் இரண்டரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோற்றது. இப்போது பாஜகவிடம் இருந்து வெளியேறியது அந்த கட்சிக்கு கூடுதல் ஆதாயத்தை தான் கொடுக்கும் என்று கூறியிருக்கிறார் காயத்ரி.
அதேபோல, ஒரு சேனலுக்கு காயத்ரி பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், “உங்களைப்போலவே எஸ்வி சேகரும் அண்ணாமலையை எதிர்க்கிறார். ஆனாலும் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும் என்கிறாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பழக்கவழக்கங்கள்: அதற்கு காயத்ரி, “50 சதவிகிதம்தான் பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது. மிச்சம் 50 சதவிகித வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்வேன். வடக்கும் தெற்கும் ஒன்று கிடையாது.. பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே வேறு மாதிரியாக இருக்கின்றன. தெற்கு பேசும் சமத்துவ பாதையை வடக்கு புரிந்துகொள்கிறதா என்றே தெரியவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
“எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என்று பதிவிட்டு வந்த நிலையில், சமீபகாலமாகவே, காயத்ரியின் நிலைப்பாடு மாற்றம் கண்டு வருகிறது.. குறிப்பாக, சந்திரயான் ராக்கெட் விட்டபோதுகூட காயத்ரியின் பேச்சு, பலரையும் கவனிக்க செய்திருந்தது..
உச்ச சக்தி: “நம்முடைய நாட்டை கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக, அந்த பணத்தை ஏழைகளுக்கு செலவிடுவதற்கு பதிலாக, நமது பூமியை பாதுகாப்பதற்கு பதிலாக நாம் இயற்கைக்கு எதிராக செல்கிறோம். சந்திரன் சூரியன் அல்ல, சூரியன் உச்ச சக்தி. மோடி ஜி பேராசையின் காரணமாக இந்த ஆதித்யா L1 கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும், ஆபத்தாக இருக்கலாம்..
நாம் பூமியிலிருந்து மாறி சந்திரன் அல்லது சூரியன் அல்லது செவ்வாய் கிரகத்தில் வாழப் போகிறோமா? நமது நாட்டில் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை கடினமாக உள்ளது. தயவு செய்து ஒரு சாமானியர் மற்றும் நம் தேசத்தின் மீது கவனம் செலுத்துங்கள். நேர விரயம் மற்றும் பண விரயம்” என்று காயத்ரி கூறியிருந்ததை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
விசிக திருமா: “இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிதான். நிச்சயமாக நான் அரசியலுக்கு வருவேன். பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன்” என்று காயத்ரி ரகுராம் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கேற்றபடி, திமுகவில் காயத்ரி இணைய போவதாக சொன்னார்கள்.. பிறகு, பாஜகவை வெறுப்பேற்றுவதற்காக, காயத்ரிக்கு காங்கிரஸ் கட்சி தூண்டில் போடுவதாக சொன்னார்கள்.. பிறகு, விசிகவில் இணைய போவதாக சொன்னார்கள்..
ஆனால், இதுவரை காயத்ரி ரகுராம் எந்த கட்சியிலும் இணையவில்லை. இந்நிலையில், 50 சதவீதம் மட்டுமே மோடிக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு இன்ச் கூட தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்று விமர்சித்திருப்பதுடன், அதிமுகவை காயத்ரி ரகுராம் புகழ்ந்துள்ளது, தற்போது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது..