சென்னை: சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களில் ஆம்னி பேருந்துகளில் 1,17,600 பேர் பயணித்துள்ளனர்.
எத்தனை லட்சம் பேர் ரயில், அரசு பஸ்களில் பயணித்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கானர் புறப்பட்டு சென்றனர் . இதனால், நேற்று சென்னை எழும்பூர், சென்டர் ரயில் நிலையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாபக்கம் உள்பட சிறப்பு பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.
கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்,கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதி மக்களை ஏற்றிக் கொண்டு சென்றன. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாகவே அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்தன. இதனால் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் வரவில்லை.
சென்னையில் தினமும் பிற ஊர்களுக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 2,100 பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகளும் வியாழக்கிழமை அன்று இயக்கப்பட்டன. கடந்த நவம்பர் 9ம் தேதி மொத்தம் 2,734 பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்ட நிலையில், மொத்தம் 1.36 லட்சம் பேர் பயணித்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 1,895 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் 6656 அரசு பேருந்துகளில் 36,6080 பேர் பயணம் செய்துள்ளனர்.. இதுவிர ஆம்னி பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலானோர் முன்பதிவுசெய்தே பயணித்தனர். கடந்த இரண்டு நாட்களில் ஆம்னி பேருந்துகளில் 117600 பேர் பயணித்துள்ளனர். நேற்று முன்தினம் 1,260 ஆம்னி பேருந்துகளில் 50400 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.. நேற்று மட்டும் 1680 ஆம்னி பேருந்துகளில் 67,200 பேர் சென்னையில் இருந்த சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர்.
ரயில்களை பொறுத்தவரை தெற்கு ரயில்வே சார்பில் ‘வந்தே பாரத்’ உட்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளில் மிக கடுமையான கூட்டம் இருந்தது.
சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர்,ரயில்களில் 2 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் சென்றிருக்கிறார்கள். இதுதவிர, கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர். இன்றும் லட்சக்கணக்கானோர் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். இன்று காலை முதலே பலரும் சொந்த வாகனங்களில் ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். ஆம்னி பேருந்துகள் , அரசு பேருந்துகள் பகலிலேயே அதிக அளவில் இயக்கப்படுகின்றன..