சென்னை: கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண் மருத்துவர் மோகன் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடித்து மகிழ்வது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடித்து, தீபாவளியைக் கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, அதன் துகள்கள் கண்ணில் படுவதால், விழித்திரை, கருவிழி, கண் இமை மற்றும் சுற்றியுள்ள தோல் போன்றவற்றில் காயங்கள் ஏற்படலாம். பார்வை நரம்புகள் பாதிக்கலாம்.
கண்ணின் மெல்லிய ரத்த நாளங்களில் துகள்கள் படும்போது, கண்ணுக்குள் ரத்தப் போக்கு ஏற்படக்கூடும். எனவே, பட்டாசு வெடிக்கும்போது கண்களில் சிறிய அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால் பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பட்டாசுகளை பற்றவைக்க வேண்டும். பாட்டிலில் வைத்து ராக்கெட் விடுவதை தவிர்க்க வேண்டும்.
பெற்றோரின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க, காற்றின் திசையை கவனத்தில் கொண்டு, நல்ல காற்றோட்டமான இடத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும். மற்றவர் மீதும், விலங்குகள் மீதும் பட்டாசுகளை வீசக் கூடாது. செயற்கை இழை ஆடைகள் மற்றும் தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை வெடிக்கும்போது, அருகில் வாளியில் தண்ணீர் அல்லது மணல் வைத்திருக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுத்து பார்க்கக் கூடாது. பட்டாசுகளை தூக்கி போட்டு வெடிக்கக் கூடாது.
மருத்துவர் பரிந்துரையின்றி… பட்டாசு வெடிக்கும்போது கண்களில் காயம் ஏற்பட்டால், கண்களை தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற வேண்டும். எந்தகாயத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது. கண்களில் இருக்கும் பட்டாசு துகள்களை தாங்களாகவே எடுக்கக் கூடாது. மருத்துவர் பரிந்துரையின்றி, எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடித்து, கண்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.