சென்னை: பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட பொது பயன்பாட்டு இடத்தை வகை மாற்றம் செய்வது மற்றும் விலக்கு கோருவதற்கான முன்மொழிவுகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பூங்கா உள்ளிட்ட பொது இடங்கள் பசுமையான சுற்றுச்சூழல் அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டது மட்டுமின்றி, அப்பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் தூய்மையான காற்றோட்டம், நல்ல சூரிய ஒளி, நீர் சுழற்சி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்கிறது. சுகாதார சீர்கேட்டை தடுக்கும் பகுதியாகவும் அமைகிறது. இது, அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் தொடர்புடையது. எனவே, பொது ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ‘வசதி’ என்பதைவிட, அத்தியாவசிய தேவை என்பதே பொருத்தமாகும்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, பொது ஒதுக்கீட்டு இடங்களை உறுதிசெய்தே நில உபயோக திட்டங்கள், மனைப் பிரிவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அனுமதிக்கப்படும் பொது ஒதுக்கீட்டு இடங்களை மாற்று உபயோகங்களுக்கு உட்படுத்துவது, பொது ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிப்பது ஆகியவற்றை தடை செய்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன.
உயர் நீதிமன்றம் கடந்த 2017-ல் வழங்கிய தீர்ப்பில், ‘பொது ஒதுக்கீடுகளில் கட்டுமானங்கள் தடை செய்யப்பட வேண்டும். கட்டுமானங்கள் இருந்தால், அதை இடித்து அப்புறப்படுத்தி, அனுமதிக்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு பயன்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, மனைப் பிரிவு தொழில்நுட்ப அனுமதி சட்ட விதிமுறைகளின்படி, பொது ஒதுக்கீடுகளை நில உரிமையாளர், அபிவிருத்தியாளரால் நகர்ப்புற உள்ளாட்சிக்கு தானப் பத்திரம் வாயிலாக ஒப்படைக்கவில்லை என்றாலும், அனுமதிக்கப்பட்ட மனைப் பிரிவு வரைபடத்தில் உள்ளவாறே பொது ஒதுக்கீட்டு பயன்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும். நில உரிமையாளர், அபிவிருத்தியாளரால் பொது ஒதுக்கீட்டு இடத்தில் கட்டுமானங்கள் எதுவும் உருவாக்கப்பட கூடாது. அவ்வாறு இருந்தால், அனுமதியற்ற அபிவிருத்தியாக கருதி, அந்த கட்டுமானங்களை அப்புறப்படுத்தி பொது ஒதுக்கீட்டு பயன்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், நகர் ஊரமைப்பு சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படும் பொது ஒதுக்கீடுகளை, அதன் நோக்கத்தில் இருந்து மாற்றி அமைக்கவோ, விலக்கம் செய்யவோ வழிவகை இல்லை. இதற்காக நீதிமன்றத்தை அணுகி, அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தால், நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வுக்கு உட்படுத்த இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனுமதிக்கப்பட்ட முழுமை திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டம், மனைப் பிரிவுகளில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அந்த உபயோகத்துக்கு மட்டுமே நிலைநிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகள் ஏதுமின்றி முறையாக பராமரிக்க வேண்டும்.
இருப்பினும், பொது ஒதுக்கீட்டு இடங்களை நில உபயோக மாறுதல், நில பரிவர்த்தனை, உபயோக விலக்கு, கட்டுமான அனுமதி, சாலை அமைத்தல், திட, திரவ கழிவு மேலாண்மை, குடிநீர் தேவை போன்ற காரணங்களுக்காக அதன் நோக்கத்தில் இருந்து மாற்றி முன்மொழிவுகள் அனுப்புவது வருத்தத்துக்குரியது.
பொது பயன்பாட்டு இடங்களை குறிப்பிட்ட நோக்கத்தில் இருந்து மாறுதல் செய்யும் முன்மொழிவுகளை மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டாம். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாக ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.