சென்னை: சென்னை துறைமுக வளாகத்தில் கப்பலில் பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை துறைமுக வளாகத்தில் ஆயில் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று ஒடிசா மாநிலத்தில் இருந்து கடந்த 31ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தது. ராயல் டெக் என்ற நிறுவனம் மூலம் அந்த கப்பலை பழுது பார்க்கும் வேலை நடைபெற்று கொண்டிருந்தது.
கப்பலின் உள்ள எஞ்சின் பகுதியை பழுது பார்த்து கொண்டிருந்த போது கேஸ் கட்டர் மூலம் அகற்றிய போது திடீரென கேஸ் பைப் லைன் மீது மோதி வெடித்தது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த தண்டையார் பேட்டையை சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா, தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ், ஜீவரத்தினம் ஆகியோர் தீ காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.