சென்னை: தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக்கருத்தில் கொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் செய்தல் அவசியம். அதுபோல பண்டிகை நேரங்களில் சாலை விபத்துகள் நேரிடும்போது அதையும் எதிர்கொண்டு மருத்துவ சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெடிகளைத் திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். அதன் அருகில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இல்லாததை உறுதி செய்தல் அவசியம்.மிகவும் தளர்வாக உடை அணிந்து பட்டாசு வெடித்தல் ஆபத்தானது. எனவே, கச்சிதமாக ஆடைகளை அணிய வேண்டும்.
சுவாசப் பாதிப்புகள் உள்ளவர்கள் பட்டாசு புகையை சுவாசிக்காமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பாதியில் வெடிக்காமல்போன பட்டாசுகளை தொடவோ, மீண்டும் வெடிக்க வைக்க முயலவோ கூடாது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருத்தல் அவசியம்.
மேலும் போதிய அளவு ரத்த அலகுகள் வைத்திருக்க வேண்டும். ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணர்களை தயார் நிலையில் பணியில் இருக்க வைக்க வேண்டும். அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தால் உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.