சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள காசா கிராண்ட் நிறுவனத்தில் ஆவணங்களை திருடியதாக ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு நடந்து வரும் சூழலில், போலீசில் திருட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐ.டி சோதனை நடைபெற்று வரும் நிலையில், அப்பாசாமி ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் நிறுவனம் ஆகியவற்றிலும் சோதனை நடந்து வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவையில் உள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. காசா கிராண்ட் நிறுவன அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்பாசாமி ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.. காரணம் என்ன?
அதில், தங்களது காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் விளம்பர பிரிவில் பணிபுரியும் சதீஷ் என்பவர் கடந்த சில மாதங்களாக காசா கிராண்ட் Aspire என்ற திட்டத்தின் அனைத்து விளம்பர ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை திருடி DAC DEVELOPMENT என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தங்கள் நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், காசாகிராண்ட் நிறுவனத்தின் விளம்பர தகவல்கள் மற்றும் ரகசிய தகவல்களைத் திருடி வேறொரு நிறுவனத்திற்கு விற்ற ஊழியர் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா கிராண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தங்கள் நிறுவனத்தின ரகசிய ஆவணங்களை ஊழியர் ஒருவர் வேறு நிறுவனத்திற்கு விற்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.