சென்னை: பட்டு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்க, சிறந்த பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள் என 12 பேருக்குபரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சேலத்தைச் சேர்ந்த க.ஜெயந்திக்கும், 2-ம் பரிசாக ரூ. 75 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூரைச் சேர்ந்த மு. பூபதிக்கும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தென்காசியைச் சேர்ந்த வை. அருள்குமரனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான ரூ.1 லட்சம் முதல் பரிசை கிருஷ்ணகிரியைச் சேர்ந் மு.முகமது மதீனுல்லாவுக்கும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரத்தை திருப்பூரைச் சேர்ந்த இரா.பெருமாளுக்கும், 3-ம் பரிசாக ரூ. 50 ஆயிரத்தை திருப்பூரைச் சேர்ந்த ஜெ. ராம்சங்கருக்கும் வழங்கினார். இதுதவிர, சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சத்தை தருமபுரியைச் சேர்ந்த மு.சாந்தமூர்த்திக்கும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரத்தை சேலத்தைச் சேர்ந்த நா.நாகராஜனுக்கும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தருமபுரியைச் சேர்ந்த ஜெ.வேதவள்ளிக்கும் வழங்கினார்.
மேலும், முதல் முறையாக மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கு பரிசுகள்வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்தசி.திலீப்குமாருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், கி.கிருஷ்ணப்பாவுக்கு 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், நா.மஞ்சுநாதாவுக்கு 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் என 12 விருதாளர்களுக்கு ரூ. 9 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டு வளர்ச்சி இயக்குனர் சந்திரசேகர் சாகமுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.