சென்னை: முஸ்லிம் மதத்துக்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி (சீர்மரபினர்) வகுப்பினர் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை பெறும் வகையில் அவர்களுக்கு பிசி-முஸ்லிம் சாதி சான்றிதழ் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, “ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தினர் முஸ்லிமாக மதம் மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில்லை. இந்த முரண்பாட்டை களைய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது பதிலுரையில், “சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின சமூகத்தினர் ஆகியோர் சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைய தேவையான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி, ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்து வரும் திமுக அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையையை பரிசீலித்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி ஆவன செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்தை அரசு பரிசீலனை செய்து, முஸ்லிம் மதத்துக்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி (சீர்மரபினர்) வகுப்பினர் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை பெறும் வகையில் அவர்களுக்கு பிசி-முஸ்லிம் சாதி சான்றிதழ் வழங்க ஆணையிடுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய உத்தரவு வழங்குமாறு வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.