சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இதில், அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், முழுமையாக, வெளிப்படைத் தன்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து, தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்துவிடுவார்கள்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘‘போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைப்பட தயாரிப்புக்கும், ஓட்டல் நடத்தவும், திமுக நிர்வாகிகளுக்கும் ஜாபர் சாதிக் செலவிட்டுள்ளார். உதயநிதி அறக்கட்டளைக்கும் பணம் கொடுத்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புடைய பலருக்கு அவர் நெருக்கமாக இருந்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக டிஜிபியிடம் ஜாபர் சாதிக் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். முதல்வரை சந்தித்தும், அமைச்சர் உதயநிதியை சந்தித்தும் நிதி கொடுத்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தில், முதல்வர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திரைப்படம் இயக்கியுள்ளார். போதைப் பொருளில் இருந்து கிடைத்த பணத்தை கொண்டுதான் திமுக தேர்தலை சந்திக்கிறது.
தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. அதற்கு திமுக அரசுதான் காரணம். அதனால், முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தியது தொடர்பாக ஜாபர் சாதிக் மீது வழக்கு இருப்பதாகவும், அதில் இருந்து வந்த வருமானம் மூலம், உயர் போலீஸ் அதிகாரிகளிடமும், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுடன் பழகி, தமிழகத்தில் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளார் என்று செய்திகள் வருகின்றன.
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டிய டிஜிபி, மாநிலத்தை ஆளும் முதல்வர், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜாபர் சாதிக்குடன் பல்வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், முழுமையான, வெளிப்படைத் தன்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஒரு துளி போதைப் பொருள்கூட தமிழகத்தில் விற்பனையாகாமல் தடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்து, மனுவும் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.