சென்னை: திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க போகிறதா? இல்லையா என்பதில் இன்னமும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. என்ன அது?
வரப்போகும் எம்பி தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் தேர்தலை சந்திக்க போகின்ற்ன.. அந்தவகையில் மும்முனை போட்டி நிலவ போகிறது.. ஆனாலும் 3 தரப்பிலுமே இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. உறுதியாகவும் இல்லை.
இதில் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. வலுவான, பலமான கூட்டணி என்றாலும்கூட, பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.. 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விசிக, மதிமுக, காங்கிரஸ் என 3 கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளன. திமுக முடிவு: இதில், விசிக, மதிமுக கட்சிகளிடம் இன்றைய தினம் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுவிடும் என்கிறார்கள். இதற்கு பிறகே காங்கிரஸ் கட்சியிடம் தொகுதி உடன்பாடு குறித்து திமுக முடிவெடுக்கும் என தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், மக்கள் நீதி மய்யம், தொடர்ந்து காத்திருக்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளது. திமுக – மய்யம் தரப்பில் மறைமுகமான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் கமலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிப்படையாகவே சொன்னார்.
முதல்வர் ஸ்டாலின்: அந்தவகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கமல்ஹாசன் நேற்றைய தினம், அண்ணா அறிவாலயம் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.. முதல்வரை நேரடியாக சந்தித்த பிறகு, கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவை தெரிவிக்கும் வகையில் அந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் சொல்லப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, கமல் நேரடியாக செல்வதால் தொகுதி பங்கீடு விவகாரங்கள் எல்லாம் நேற்றே இறுதியாகவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரபரத்தன. அதனால்தான், மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள், வெளியூர் செல்லாமல் சென்னையிலேயே இருந்தனர். ஆனால், கடைசிவரை பேச்சுவார்த்தைக்கு கமலை திமுக அழைக்கவில்லை.. இதனால், மூத்த அமைச்சர் நேருவை தொடர்புகொண்டு, கமல் பேசியிருக்கிறார்.
அறிவாலயம்: அதற்கு நேரு, “கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, சிறுத்தைகள் கட்சிகளுக்கான தொகுதிகளை முடித்துவிட்டு உங்களிடம் பேசலாம்னு தலைவர் சொல்லியிருக்கார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஞாயிற்றுக்கிழமைக்குள் அறிவாலயத்தில் நீங்கள் இருப்பீர்கள்” என்று கமலிடம் நேரு உறுதி தந்தாராம்..
இதையடுத்து, நேற்று நடக்கவிருந்த உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தை ரத்து செய்துவிட்டார் கமல்… திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும், திமுக இவரை அழைக்காமல் இருப்பதாலும், கமலை திமுக புறக்கணிப்பதாகவும், இதனால் கமல் அதிருப்திக்கு ஆளாகிவிட்டதாகவும், பாஜக + அதிமுக தலைமைக்கு தகவல் பறந்துள்ளது.. பாஜக கூட்டணி: உடனே பாஜகவும் அதிமுகவும் கமலை தொடர்புகொள்ள முயற்சிக்க துவங்கிவிட்டார்களாம். ஆனால், அந்த நேரத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாராம் கமல்… இருந்தாலும், தங்களது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யன் போல, கமலை தங்கள் பக்கம் இழுக்க திரை மறைவில் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதாம். உண்மை சொல்லப்போனால், “வெயிட் பண்ணுங்க” என்று தான் திமுக மேலிடம் சொன்னதாம்.. கமலும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டாராம். ஆனால், அதிமுக, பாஜக தரப்பினர், ஆழ்வார்பேட்டை பக்கமே சுற்றிவருவதாக தெரிகிறது. திமுக கூட்டணி: சில நாட்களுக்கு முன்பு நாம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, திமுக கூட்டணி உறுதி செய்யப்படும்வரை அதிமுக தன்னுடைய கூட்டணியை அறிவிக்க போவதில்லையாம்.. காரணம், திமுக கூட்டணியுடன் அதிருப்தி ஏற்பட்டால், அந்த கட்சியை அதிமுகவுக்குள் கொண்டுவரலாம் என்பதே அதிமுகவின் எண்ணமாக உள்ளதாம். அதற்கேற்றபடி, திமுக கூட்டணி நிச்சயம் உடையும் என்பதால், அங்கிருந்து சில கட்சிகள் அதிமுகவுக்கு வரக்கூடும் வருவார்கள், அவர்கள் வருவதை யாராலும் தடுக்கவே முடியாது என்று ஜெயக்குமாரும் சொல்லி கொண்டேயிருக்கிறார். ஒரே பரபரப்பு: அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று திருமாவளவன் சொல்லிவிட்டார், செல்வப்பெருந்தகையும் சொல்லிவிட்டார்.. எனினும், அதிமுகவின் குறி இப்போது மய்யம் மீது விழுந்துள்ளது. அறிவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் செல்லும்வரை, இந்த பரபரப்பு ஓடிக்கொண்டிருக்கும் போல.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!