சென்னை: பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸின் மூவ் ஒன்று டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ராமதாஸ், அதிமுக கூட்டணியையும் ; அன்புமணி, பாஜக கூட்டணியையும் விரும்புகிறார்கள்.
என்ன காரணம்?: பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறாராம். கிட்டத்தட்ட அடம் பிடிக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது. அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு “மீண்டும்” ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிதான் அன்புமணி கோரிக்கை வைக்க உள்ளாராம்.. ராமதாஸ்: ஆனால் அன்புமணியின் இந்த திட்டத்தை ராமதாஸ் விரும்பவில்லையாம். பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டில் பாமகவிற்கு மரியாதை குறையும். அதனால் பாமக அதிமுக கூட்டணியே சரியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இதுதான் சரியாக இருக்கும் என்பதால்.. 2024லும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.
அதே கூட்டணி தொடர வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம். மேலும் பாமகவை உடைக்க பாஜக முடிக்க பார்க்கிறது. அதனால் பாஜகவோடு சேருவது சரியாக இருக்காது என்று ராமதாஸ் நினைக்கிறாராம். இதனால் ராமதாஸ் – அன்புமணி இடையே கூட்டணி விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாம்.
வேறு வேறு காரணங்கள்; அவரவர்களின் விருப்பத்துக்கேற்ப காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த காரணங்கள் அவரவர் தரப்பில் நியாயமானதாக இருக்கிறது. இதனால் முடிவு எடுப்பதில் தைலாபுரம் தோட்டம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் 99 சதவீதம் கூட்டணியை உறுதிப்படுத்தி வைத்திருந்தார் ராமதாஸ். அதற்கேற்ப, நேற்று சென்னை வந்த ராமதாசை, அதிமுக பேச்சுவார்த்தைக் குழு சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸின் மூவ் ஒன்று டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி அன்புமணி, ராமதாசிடம், ”டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு கொடுத்துள்ளனர். டெல்லிக்கு செல்கிறேன். அங்கு என்ன சொல்லப்படுகிறது என்பதை நான் தெரிவிக்கிறேன். அதன் பிறகு முடிவு செய்துகொள்ளலாம். அவசரப்பட்டு அதிமுக குழுவினரை சந்தித்து விட வேண்டாம் ” என்று சொல்லிவிட்டு டெல்லிக்கு பறந்துள்ளார் அன்புமணி. பாஜக முக்கிய தலைவர்களுடன் இன்று சில சந்திப்புகள் இருக்கிறதாம். அந்த சந்திப்புக்கு பிறகே பாமகவின் முடிவு தெரியவரும் என்கிறார்கள் பாமகவின் மாநில நிர்வாகிகள்.