சென்னை: தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்டபொது நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்களை கொள்முதல் செய்யுமாறு பள்ளிக்கல்வி துறை செயலர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார்.
நூல் கொள்முதல் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பொது நூலகங்களுக்கு நூல்கொள்முதல் செய்ய, பிரத்யேகமாக இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நூல் கொள்முதலுக்காக, அரசின் ஒப்புதல் பெற்று வல்லுநர்கள் அடங்கிய நூல் தேர்வு குழுவை பொது நூலக இயக்குநர் நியமிக்கவேண்டும். தேவையான துணை குழுக்களையும் அமைக்க வேண் டும். நூலகங்களில் பயன்படுத்து வதற்காக விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் பன்னாட்டு புத்தக தர குறியீட்டு எண் பெறப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு குழு ஒவ்வொரு நூலுக்கும் அளிக்கும் மதிப்பெண் முறையில், சிறந்த நூல் எது என்ற பரிந்துரைகள் தொகுக்கப்பட வேண்டும். தேர்வு குழு உறுப்பினர்கள் ஏதேனும் நூல்எழுதியிருந்தால், அந்த நூலை பரிசீலிப்பதற்கான தேர்வில் அவர்கள் பங்கேற்க கூடாது.
நூல் தேர்வு குழு உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும். ஒருமுறை இக்குழுவில் இடம்பெற்றவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதில் இடம்பெற கூடாது. தரமற்ற காகிதத்தில் அச்சிடப்படும் நூல்கள் நிராகரிக்கப்படும். விலை குறியீட்டு எண், விலை வரம்பு நிர்ணயம் செய்யப்படுவதற்கான கணினி மென்பொருள் கணக்கீடுகள் உருவாக் கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.