சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின்கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல், 2024 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டும்.
இதையடுத்து 2011 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து, 2023-ம் ஆண்டுக்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.
இதை கருத்தில்கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி தகுதியானவர்கள் விவரப் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநரத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறாதவர்கள், ஒழுங்கு நடவடிக்கை (17பி) நிலுவையில் உள்ளவர்கள், குற்றவியல் வழக்குகளில் சிக்கியவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கக் கூடாது. விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.