சென்னை: ‘பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது.’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் போன்றோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், ‘பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசினோம். தமாகா தேர்தல் குழு அமைத்தபின் முறைப்படி தொகுதி எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படும்.
மார்ச் 4 முதல் 6 வரை தமாகா விருப்ப மனு பெறவிருக்கிறது. அதன்பின் பாஜக குழு தமாகா உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும். நாட்டு நலன் கருதி மத்தியில் நல்லாட்சி அமைய தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமாகா கேட்டுக்கொள்கிறது. மாநில கட்சிகள் நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சியாக செயல்படக்கூடிய முக்கிய தருணம் இது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவை நாட்டு நலன் கருதி எடுக்க வேண்டும்.
இண்டியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. அந்த கூட்டணியின் கருத்து வேறுபாடும், திறனற்ற செயல்பாடும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை குறைத்துக்கொண்டு போகிறது. தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது.’ என்று தெரிவித்தார்.