சென்னை: குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரின் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது;
ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிட இயக்கத்தின் நிகழ்கால நம்பிக்கை. பெரியார் – அண்ணா – கலைஞர் அவர்களின் சிந்தனை, செயல், ஆற்றல் ஆகியவற்றின் கலவையாய் தமிழ்நாட்டின் உரிமைக் காக்கும் மகத்தான தலைவர். எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், எதிரியின் கால்பிடிக்கும் கோழைகளுக்கும் அச்சம் தரும் ஜனநாயகப் போர்க்குரல்.
வாக்களித்தோர்க்கும், வாக்களிக்கத் தவறியோர்க்கும் அரசின் திட்டங்கள் மூலம் சமமாய் ஒளிவீசும் திராவிடச் சூரியன், நம் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தோம். இனமானம் காப்போம், உரிமைகளை வெல்வோம், துவள மாட்டோம் – வீழ மாட்டோம் என நம் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.