சென்னை: தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டுதொடங்கி வைத்தார். இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதால், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், மருத்துவ குழுவினர் தொழிற்சாலைகளுக்கே நேரடியாகச் சென்று, தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 6.30 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 65,638 பேருக்கு பரிசோதனை செய்ததில், 4,544 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “பொதுமக்கள் தங்களுக்கு உள்ள நோய் பாதிப்பு குறித்து தெரியாமல் உள்ளனர். இதயம், சிறுநீரகம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு அடித்தளமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், மற்ற நோய்களை தடுக்க முடியும்.
அதனால், தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மூலமாக அவர்கள் இருப்பிடங்கள், பணியாற்றும் இடங்களுக்குச் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போலவே, தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.