சென்னை: திமுக மேல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும், 40 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2-வது முறையாக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக பிரதிநிதி ஒருவருக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி இருக்கின்றனர். தமிழக நலன் கருதி, தமிழர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி 2019-ல் மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார். இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார். மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது.
வெற்றிவேல் யாத்திரை மூலம் சட்டப்பேரவைக்கு 4 எம்எல்ஏக்கள் சென்றார்கள். அதேபோல், என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக 40 எம்.பி.க்கள் மக்களவைக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்த யாத்திரையின் நிறைவு தமிழக அரசியலையே மாற்றியமைக்கும். பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
மோடி தலைமையை மக்கள் ஏற்கிறார்கள். தமிழகத்தில் வழக்கமாக ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் நமது விருப்பமும். திமுகவின் மேல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அது இந்த தேர்தலில் வெளிப்படும். 40 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.