சென்னை: மகன் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பங்கேற்று கண்கள் கலங்க உருக்கமாக பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குனரான இவர் புதிய படப்பிடிப்பு தளத்தை பார்க்க இமாச்சல பிரதேசம் சென்றார். கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் அவர் பயணித்த கார் விழுந்து விபத்துக்குள்ளானது
கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.இந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமானார். போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் வீரர்கள் கடந்த 8 நாட்களாக வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் 12ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத் தனிவிமானத்தில் இன்று வெற்றியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
இதில் வெற்றியின் படத்துக்கு சைதை துரைசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சைதை துரைசாமி நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். அது அனைவரையும் கலங்க வைத்தது. அப்போது வெற்றி துரைசாமி கூறியதாவது: வெற்றியின் நினைவேந்தல் நிகழ்ச்சியை இன்னொரு மகனான ஏய்ம் வெற்றி ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் எனக்கு மனவலிமையை என்னுடைய மாணவர்கள் தருகிறார்கள். மனித நேயத்தில் படித்து அனைத்து துறை அரசு பணிகளிலும் இருக்கிற மாணவர்கள் ‛அப்பா கவலைப்படாதீர்கள்.. நாங்கள் உங்களுக்கு மகனாக, மகளாக இருக்கிறோம்’ என சொன்ன அந்த ஆறுதல் வார்த்தைகள் தான் என்னை வலிமைப்படுத்தி வலிமைப்படுத்தி இந்த சோகத்தில், துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறது.
மேலும் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த சமூகத்துக்காக, சக மனிதனுக்காக இந்த மனிதநேயத்தை விரிவாக்கம் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி அவர்கள் எல்லாம் அப்பா என சொல்ல வேண்டும் என்ற உந்து சக்தியுடன் நான் தயாராகி வருகிறேன். என்னுடைய வாழ்க்கை என்பது சக மனிதர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் இந்த வாழ்க்கை சோதனை மிக்கது, துன்பமிக்கது என்று தெரிந்திருந்தும் பின்பற்றுகிறேன் என்றால் விதி வலியது என்பதை இறைவன் உணர்த்தி இருக்கிறான் என்றால், இறையருள் இந்த குடும்பத்துக்கு இருக்கிறது என்றால் என் மகன் எனக்கு திரும்ப கிடைத்தது தான். அவன் உடல் கிடைக்காமல் போயிருந்தால் வாழ்க்கை துக்கத்தில், சோகத்தில் என்ன நடந்து இருக்கும் என்றே தெரியாது. இறையருளால் உடல் கிடைத்தது.
அப்படியென்றால் நான் செய்த காரியங்கள் எல்லாம் இறையருள் பெற்றதாக இருக்கிறது என்று இனி அதை விரிவாக்கம் செய்து இந்த சமூகத்துக்காகவும், சக மனிதர்களுக்காகவும் வாழ்வது தான் இந்த பிறப்பின், வாழ்க்கையின் அடையாளம் என்று உணர்ந்து அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி என் மகனுக்கு நடக்கும் என்று ஒரு காலம் கனவில் கூட நினைக்கவில்லை.
என் மகன் என்னோடு வாழ்ந்த கொண்டிருக்கிறான். என் செயல் சிந்தனைகள் அவனது நினைவாக இருக்கும். இந்த சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும். சக மனிதனை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை உந்து சக்தியாக பெற்று நான் பயணிக்கிறனே். அந்த பயணத்துக்கு உங்களை போன்றவர்களின் ஆறுதல் மனவலிமையை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்” என உருக்கமாக கூறினார்.