சென்னை: தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரான பூவழகன், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி சேர்த்து, வாங்கிய தொகையை விட பல மடங்கு பணம் செலுத்திய பிறகும் கூட, இன்னும் பணம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோர் மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் பூவழகனை கடத்திச் சென்ற அவர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் முட்டி போட வைத்து கொடுமைப் படுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியுள்ளனர். அதைத் தாங்க முடியாமல் தான் கடந்த 12-ஆம் நாள் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்ற பூவழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.
பூவழகனைப் போலவே மேலும் பல நூறு பேருக்கு கடன் கொடுத்து, அதற்கு கந்து வட்டி கேட்டு இந்த கும்பல் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள், வணிகர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு சூதாட்டத்திற்கு அடிமையாக்கும் இந்த கும்பல், சூதாட்டம் விளையாடுவதற்காக லட்சக்கணக்கில் பணத்தை கடனாகக் கொடுத்து கந்து வட்டியை வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பூவழகனைப் போல மேலும் பலர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.
பூவழகன் தற்கொலை செய்து கொள்ள முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கந்து வட்டி கும்பலைப் பிடித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் மிரமுகர்கள் தலையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர் அளிக்கும் துணிச்சல் மற்றும் ஆதரவில் தான் கந்துவட்டி கும்பல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.