சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உண்டு உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறு மாத கால பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு இளைஞர்கள் அதிக அளவில் மத்திய அரசு வேலைகளில் சேர வேண்டும் என்ற நோக்கில் தரமான இலவச பயிற்சி மையங்களை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு கூறுகையில், ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் முதல் நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7500 ரூபாய் மற்றும் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் , இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைக்கும் உயரி நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனிச்சிறப்பு மிக்க இத்திட்டத்தில் இதுவரை சுமார் 28 லட்சம் மாணவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். 18000 பொறியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும், 20000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்ட பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.19 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பரவலாக கல்லூரிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.