சென்னை: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
புதுவை கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கரு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த பஞ்சு மிட்டாய்களிலும் ரோடமைன் பி எனும் ரசாயனம் இருந்தது என தெரியவந்தது. இதையடுத்து தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.