சென்னை: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பேரவையில் முதல்வர் நேற்றுதனது பதிலுரையில் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ‘ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும்’ என ஒரு நீண்டகால கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களையும் என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு, ஜவாஹிருல்லாவின் கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, மமக தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்.