சென்னையின் மிக பிரபலமான உதயம் சினிமா தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்’ என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார்.
அந்த உதயம் தியேட்டர் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது மூடுவிழா கண்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் மூடப்பட்டு திருமண மண்டபங்கள் ஆகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் ஆகி வருவது சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த உதயம் தியேட்டர் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
படங்கள் முதல் பாடல்கள் வரை அந்த திரையரங்கங்களின் பெயர்களை நாம் கேட்டிருப்போம். 90களில் ரசிகர்களின் கொண்டாட்ட தலமாக நிகழ்ந்ததும் இந்த தியேட்டர் தான். சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த இடங்களில் உதயம் திரையரங்கம் பிரபலமானது.
1983-ல் திறக்கப்பட்ட ‘உதயம் காம்ப்ளெக்ஸ்’ 40 வருடங்களாக மக்கள் நினைவில் நிற்கும் ஒரு முக்கிய இடமாகும். கே. பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’, விக்ரமனின் ‘புது வசந்தம்’, மணிரத்னத்தின் ‘அஞ்சலி’, ‘தளபதி’, சந்தான பாரதியின் ‘குணா’ ஆர்.வி. உதயகுமாரின் ‘பொன்னுமணி’, தரணியின் ‘கில்லி’ உள்ளிட்ட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பல வெற்றி திரைப்படங்களை இந்த திரையரங்கம் கண்டது.
அசோக் நகரில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு ஸ்கிரீன்கள் இயங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவது குறைந்துவிட்டதாலும் சிறிய அளவிலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே தாக்கு பிடித்து வரும் நிலையில் இந்த திரையரங்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த திரையரங்கை பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் சமீபத்தில் தான் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் இந்த இடத்தில் தற்போது நவீன அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சாந்தி திரையரங்கம் உள்பட சென்னையில் பல பழமையான திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது உதயம் திரையரங்க வளாகம் மூடப்பட்டிருப்பது திரை உலகினர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. திரைப்பட வளாகமாக மட்டுமின்றி சென்னைக்கு ஒரு அடையாளமாகவும் இருந்து வந்தது ‘உதயம் காம்ப்ளெக்ஸ்’ என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாட்டில் ஏராளமான திரையரங்கங்கள் மூடப்படுவதற்கு ஓடிடி தளங்களும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்து விடுவதால் திரையரங்கத்தில் கூட்டம் குறைவதாகத் திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.