சென்னை: அ.தி.மு.க – துணை எதிர்கட்சி தலைவராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , சட்டப்பேரவையில் , அவரின் இருக்கை 206-ல் இருந்து 207-ஆக மாற்றப்பட்டுள்ளது.
புதிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு 206 இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பதவியில் இருந்து வந்தனர். அதேபோல் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வந்தனர். இதனிடையே 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சியில் சலசலப்பு எழுந்தது.
அந்த சமயத்தில் கட்சியில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் பல மனுக்ககள் தாக்கல் செய்யப்பட்டபோதிலும், அவருக்கு சாதகமான தீர்ப்பு அமையாத நிலையில், ஒ.பன்னிர்செல்வத்தின் பொருளாளர் மற்றும் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, புதிய எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கான இருக்கை மாற்றப்பட வேண்டும் என்றும், ஒ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டு புதிய எதிர்கட்சி தலைவருக்கு அவருக்கான இருக்கை வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தற்போது இந்த மாற்றம் சட்டசபையில் நிகழ்ந்துள்ளது.
எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக பரிசீலிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சட்டப்பேரவை மரபு படி எதிர்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இருக்கை என் 205-ல் எடப்பாடி பழனிச்சாமியும், 206-ல் புதிய எதிர்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், 207-ல் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.