சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் பிரிவு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவில் 30 போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தோடு இணைந்து கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் வருகை மற்றும் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஆயுதப்படை போலீஸார் குறித்து கண்காணிக்கும் அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணையர் அலுவலகத்திலும்.. ஏற்கெனவே இதேபோன்று வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.