சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி, 243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்துகொண்டு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை நேற்று (பிப்.12) ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை தமிழக முதல்வரிடம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில்தான் இந்த ராஜினாமாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பின்னணி: அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 13-ம் தேதி சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
முதல் நாள் காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட சோதனை அடுத்த நாள் வரை நீடித்தது. இறுதியாக ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சில வாரங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்துவந்த செந்தில் பாலாஜி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகளை பெற்றுவந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை. இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். அவர் பொறுப்பு வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதையும் உயர் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் பிப்.14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்கவில்லை. இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்து தமிழக அரசு நிர்வாக ஆணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.