சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கள் விமானங்களை தரையிறக்க தயங்கும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்சைக்கும் உடனே தீர்வு காண வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் பரந்தூர் விமான நிலைய பணிகளை தொடங்குவது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் பரிந்துரைக்கின்றனர்.
தமிழ்நாட்டின் அடையாளங்களின் ஒன்றாகவும், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுமான சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1301 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. இங்கு சர்வதேச முனையம், உள்நாட்டு முனையம் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 1 கோடியே 80 லட்சம் பயணிகளை கையாளும் சென்னை விமான விமான நிலையத்தில் அண்மை காலமாக சர்வதேச விமானங்கள் தரையிறங்குவது வெகுவாக குறைந்து வருகிறது. சர்வதேச விமானங்களை கையாள்வதற்கு தேவையான ஏரோ பிரிட்ஜூகள் சென்னை விமான நிலையத்தில் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் சில நிறுவனங்கள் தங்களது சர்வதேச விமான சேவையை ஹைதராபாத் அல்லது பெங்களூருக்கு மாற்றியுள்ளன.
சென்னையில் வெறும் 4 ஏரோ பிரிட்ஜுகள் மட்டுமே உள்ளதை குறித்து நாடாளுமன்றத்தில் முறையிட்ட திமுக எம்.பி.வில்சன், சர்வதேச விமானங்கள் தற்காலிகமாக தரையிறங்கி செல்லும் பாயிண்ட் ஆப் கால் முறையை சென்னைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏரோ பிரிட்ஜூகள் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்லாது இரவு நேரங்களில் விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கான வாடகையும் அதிகமாக உள்ளது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
இதற்கு தீர்வு காண பரந்தூர் விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று விமான போக்குவரத்துத்துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய மையமாக உள்ள சென்னை விமான நிலையத்தின் தற்போதைய சூழல் பரந்தூரில் உடனே விமான நிலையம் அமைப்பதற்கான தேவையை அதிகரித்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். விமான நிலையங்களை அமைக்க கொள்கை ரீதியாக முன்னுரிமை அளிக்காவிட்டால் பொருளாதார இழப்பு பலமடங்காகும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.