தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன.
பிப்ரவரி 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் 12 ம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் நடத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி 12ம் வகுப்புக்கு இன்று தொடங்கி 17ம் தேதி வரையிலும், 11 ம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.
அதன்படி சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் 2 ம்கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 249 பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் சுற்றில் பிப்ரவரி 12ம் தேதி இன்று முதல் 17ம் தேதி வரையிலும், 2ம் சுற்று பிப்ரவரி 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகள் அரசுத் தேர்வுத்துறை அறிவித்தபடி புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.