சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஏற்கெனவே அறிவித்தபடி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்கப்படும், எனக்கூறி வழித்தடங்கள் குறித்து இரு வரைபடங்களைத் தாக்கல் செய்தார்.
ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை சென்னை மாநகருக்குள் உள்ள தங்களின் பணிமனைகளில் இருந்து ஏற்றி, இறக்கி அனுமதிக்க வேண்டும், என கோரினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்டதே கேள்விக்குறியாகிவிடும். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டுமென்பதற்காக அனைத்து புறநகர் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போது ஆம்னி பேருந்துகளுக்காக முடிச்சூரி்ல் 5 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடனும் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஆம்னி பேருந்துகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றிஇறக்கலாம். அங்குள்ள கேரேஜ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், போரூர் மற்றும் சூரப்பேடு டோல் பிளாசா நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்கவேண்டும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்பட கூடாது’என்று இடைக்கால உத்தரவிட்டு.விசாரணையை ஏப்.15-க்கு தள்ளி வைத்துள்ளார்.