சென்னை: சென்னை, மெரினாவில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,000 பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சு மிட்டாயில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் (ரோடமென் பி) ரசாயனம் நிறத்துக்காக கலக்கப்படுவதாகவும், இதனால்எளிதில் புற்றுநோய் பரவுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் மெரினா கடற்கரையில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
பின்னர், பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சுமார் ஆயிரம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சதீஷ்குமார் கூறியதாவது: பஞ்சு மிட்டாய் நிறத்துக்காக பயன்படுத்தக்கூடிய ரோடமென் பி, பெல்ட், காலணி, ஆடை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தக்கூடிய ரசாயன வகை ஆகும்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளை பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இதில் ரசாயனம் கலந்திருப்பதுதெரியவந்தால் சட்டரீதியான நடவடிக்கை விற்பனையாளர் மீது எடுப்பதற்காக காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
அதேபோல் வரக்கூடிய காலங்களில் மெரினாவில், மீன் வகைகள், பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழகுபாண்டி, சதாசிவம், கண்ணன், செல்வம் உள்ளிட்டோர் இருந்தனர்.