சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல், வருமான வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநில வாரியாக ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ, முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
பகல் 12 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த அவர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து பேசினர். தொடர்ந்து, தேர்தல் துறையின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பிற்பகல் 2.30 மணி அளவில் தேர்தல் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். இதில், தமிழக காவல் துறை சார்பில், தேர்தலுக்கான பொறுப்பு அதிகாரிகள், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமன், ஐ.ஜி.க்கள் ரூபேஷ்குமார் மீனா (விரிவாக்கம்), செந்தில்குமார் (பொது), போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் அரவிந்த், தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர். வருமான வரி, வருவாய் புலனாய்வு, சுங்கத் துறை, மத்திய ரிசர்வ் படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தேர்தல் நேரத்தில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் கடத்தல், பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆலோசனை கூட்டம் 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று காலை முதல் மாலை வரை, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். இதில் சத்யபிரத சாஹு உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.