சென்னை: அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மண்டல வாரியாக சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்டு, அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல அளவிலான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் சென்னை வானகரம் அடுத்த வேலப்பன்சாவடியில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், வைகை செல்வன் ஆகியோர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். மனுக்களாகவும் அளித்தனர்.
விவசாயிகள் தரப்பில் பேசும்போது, “தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாய கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தனி நபர் பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும்” என்றனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக போராடும். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.