Breaking News
Home / செய்திகள் / சென்னையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் – 36 நபர்கள் கைது

சென்னையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் – 36 நபர்கள் கைது

சென்னை: கடந்த 7 நாட்களில் சென்னை மாநகரில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29.01.2024 முதல் 04.02.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 24 கிலோ மாவா, ரொக்கம் ரூ22,180/-, 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இலகு ரக சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *