சென்னை: ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களை நியாய விலை கடை ஊழியர்கள் எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாலின், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எப்போது வந்து கேட்டாலும் இன்முகத்துடன் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது;
”நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ‘பயோமெட்ரிக்’ கைரேகைப் பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பின், அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பயன்படுத்தி பொதுமக்களுக்குப் பொருள்களை வழங்கிட வேண்டும். அதற்காகப் பொதுமக்களை எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது.”
”அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாலின், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உரிய காலத்தில் நகர்வு செய்து பொதுமக்கள் எப்போது வந்து கேட்டாலும் இன்முகத்துடன் விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும். மாவட்ட வழங்கல் அலுவலர்கள், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களுடன் இணைந்து அரிசிக் கடத்தலை முழுமையாக நிறுத்த வேண்டும்.”
”முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கூட்டங்களில் உரிய அலுவலர்கள் கலந்து கொண்டு தெரிவிக்கப்படும் குறைகளுக்கு உடனடித் தீர்வு கண்டிட வேண்டும். தேவைப்படும் இடங்களில் பகுதிநேரக் கடைகள் திறந்திடவும் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளைப் பிரித்திடவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
”வாடகைக் கட்டடங்களுக்குப் பதிலாக சொந்தக் கட்டடங்கள் அனைத்துக் கடைகளுக்கும் அமைந்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பகுதிநேரக் கடைகள் தேவைப்படும் ஊர்களில் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைக்காமலே அலுவலர்களே கண்டறிந்து உரிய முன்மொழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும்.”
”குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் கைப்பற்றிய வாகனங்களை விரைந்து ஏலம் விட வேண்டும் என்றும், தடுப்புக் காவலில் கைது செய்வதோடு நில்லாமல் வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத் தருமளவுக்குச் செயல்பட வேண்டும் என்றும் மாநில எல்லையோர மாவட்டங்களில் ரோந்துப் பணியை அதிகரித்து கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.”
”முதலமைச்சர் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன நெல் சேமிப்புத் தளங்களை நம் துறைக்கு வழங்கி, நெல் கொள்முதலில் எவ்விதக் குறைபாடும் ஏற்படக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவுறுத்தலின்படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும்.
விவசாயிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடமிருந்து கொண்டுவரப்படும் நெல்லினை உடனுக்குடன் கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும். ”