சென்னை: அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும், அதிமுகவும் சளைத்தவையல்ல என்றும் பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே, கருணாநிதி வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதலானது. அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் திமுக இருக்கிறது.
பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்ட வேண்டிய உறுதியுடன் உள்ளோம். மாநில உரிமைகளை கட்டிக்காக்க தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, தேர்தல் பணிகளை முன்கூட்டியே முன்னெடுத்துள்ளது திமுக. நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, தேர்தல் அறிக்கைகுழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை பணிகளை உடனடியாக தொடங்கிவிட்டன. இதில், டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழுவினர் காங்கிரஸுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்து, மற்ற தோழமை கட்சிகளுடன் ஆலோசனையில் உள்ளனர்.
சொன்னதை செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவோம், ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், விவசாயிகள் வருவாயை மும்மடங்காக்குவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றும் பாஜக போலவோ, அதன் கூட்டணியான அதிமுக போலவோ திமுகவின் வாக்குறுதிகள் இருக்காது இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பில் திமுக இருக்கும்.
தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கே.என்.நேரு தலைமையிலான குழவினர், தினசரி 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருமாவளவன் முன்னெடுத்து நடத்திய வெல்லும் சனநாயகம் மாநாட்டில் நான் கூறியதைப்போல், தமிழகத்தில் பாஜக பூஜ்யம்தான். பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவு படுத்துங்கள். கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள்.
நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும், அதிமுகவும் சளைத்தவையல்ல. திமுகவை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரப்புரை இருக்கும். எதற்கும் திமுக அஞ்சாது என்பதை களப்பணிகள் மூலம் புரியவைப்போம். பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. முழுமையான பட்ஜெட் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இண்டியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம். அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம்.