சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவின் அடையாள அட்டை காணாமல் போனதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரியான சத்யபிரத சாஹுவின் அடையாள அட்டை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சத்யபிரத சாஹுவின் அலுவலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையைப் புதுப்பிப்பதற்காக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பசத்யபிரத சாஹு முடிவு செய்தார்.
அடையாள அட்டையை தபாலில் அனுப்புவதற்காக தனதுஉதவியாளர் சரவணன் (44) என்பவரிடம் கடந்த 22-ம் தேதி கொடுத்து அனுப்பினார். சரவணன் தபால் நிலையத்துக்கு சென்றபோது அடையாள அட்டை காணாமல் போயுள்ளது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சரவணன் 29-ம்தேதி புகார் அளித்தார். புகாரைப்பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த தேர்தல் துறை பிரதிநிதிகள் சிலர் தேர்தல் பணிகளைப் பார்வையிட இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகளை அளிப்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.