Breaking News
Home / செய்திகள் / தமிழகத்தில் 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 8 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழகத்தில் 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 8 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது 750 சதுரமீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறையை மாற்றி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) தமிழக பிரிவின் சார்பில்,‘ ஸ்டேட்கான்’ எனப்படும் 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கிரெடய் தமிழ்நாடு மற்றும் நைட் பிராங்க் இணைந்து தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் எதிர்கால திறன் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் கிரெடாய் தமிழகத் தலைவர் ஆர்.இளங்கோ, கிரெடாய் தேசிய துணைத் தலைவர் தர் ஆகியோர் கட்டிட அனுமதி, நிலமாற்றம், மறுவரையறை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, “திட்ட அனுமதிக்கு ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் கொண்டு வருவது குறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்யும். விண்ணப்பத்துடன் உரிய காலத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வரும் காலங்களில் அனுமதியை இரட்டிப்பாக்கும் முயற்சியை எடுப்போம்’’ என்றார்.

இதையடுத்து, அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: கட்டுமானத் துறையினரின் 100-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் 43 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, அதில் தற்போது 25 கோரிக்கைகள் மீதுஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு சட்டத்திருத்தங்கள் தேவைப்படுவதால் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஒற்றைச்சாளர அனுமதி திட்டம்: ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கும் கட்டிடத்துக்கான உயரத்தை 12-ல் இருந்து 14 மீட்டராக்கும் கோரிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர இருக்கிறது. தளப்பரப்பு குறியீடு என்பது 2.25 மற்றும் 3.25 ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அளவை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்யப்படும். சுயசான்று அளிக்கும் திட்டத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், இப்போது எத்தனை அனுமதி பெறப்பட்டது. அதில் விதிமீறல் இல்லாதது எவ்வளவு என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டியுள்ளது. விதிமீறல் குறைந்தால் அந்த திட்டத்துக்கு மாறலாம். பொறியாளர்கள், ஆர்க்கிடெக்ட் நிபுணர்கள் பொறுப்பேற்று, அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் அந்த திட்டத்துக்கு செல்லலாம்.

பணிமுடிப்பு சான்றிதழை பொறுத்தவரை 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறை தற்போது உள்ளது. இனி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அனுமதி விரைவில் வெளியாக உள்ளது. மாஸ்டர் பிளானை பொறுத்தவரை 8 தயாரிக்கப்பட்டுள்ளது. வனம் சார்ந்த ‘ஹாக்கா’ பகுதி என்பது சில மாவட்டங்களில் பிரச்சினை உள்ளது. இதில் தற்போது, கிராமம் என்று எடுப்பதை விடுத்து, குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு மட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடையின்மை சான்றிதழ்கள் எண்ணிக்கையை குறைத்து ஆன்லைனில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *