சென்னை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ கடந்த டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
புதிய முனையம் திறந்ததில் இருந்தே, ‘இங்கு இணைப்பு பேருந்து வசதி இல்லை. வடசென்னைக்கு செல்ல வேண்டுமானால் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது’ என்று பயணிகள் புகார் கூறிவருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 30-ம் தேதி (இன்று) முதல் கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். அதன்பிறகு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.
திண்டிவனம் வழியாக திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி செல்லும் பேருந்துகள், செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் புறப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது.
மேற்கண்ட வகையில் பேருந்து இயக்கம் மாற்றப்படுவதால், பயணிகள் வசதிக்காக, விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து கிளாம்பாக்கம் வந்தடையும். பின்னர், கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.