சென்னை: கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. இன்று (ஜன. 30, 2024) முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம். தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரையில் இந்த தேர்வு நடைபெறும். 200 கேள்விகளுக்கு தேர்வர்கள் பதில் அளிக்க வேண்டும். மொத்தம் 300 மதிப்பெண்கள். கொள்குறி முறையில் வினாத்தாள் இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதனடிப்படையில் தேர்வர்கள் தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.