சென்னை: அடுத்த வாரத்துக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பிப். 3, 4 தேதிகளில் மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த ஜன.28-ம் தேதி முடித்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக வரும் பிப்.9-ம் தேதி பேச திட்டமிட்டிருந்தன.
இந்நிலையில், நாளை ஜன.31-ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. மறுநாள் பிப்.1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தொடரில், திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டியுள்ளதால், வரும் பிப்.2-ம் தேதி வரை பேச்சுவார்த்தைக்கு யாரும் அழைக்கப்படவில்லை. பிப்.3-ம் தேதிக்குப்பின் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பிப்.3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுகிறது. மறுநாள் பிப்.4-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடனும், அன்று மாலை மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச திமுக திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்தமுறையும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிகவுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இம்முறை திமுகவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வரும் பிப்.7-ம் தேதி சென்னை திரும்புகிறார். தொடர்ந்து பிப்.9-ம் தேதி அடுத்தகட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேசுகிறது. அன்றே அனைத்து தொகுதி பேச்சுவார்த்தையையும் முடித்துக் கொண்டு, தொகுதி பட்டியலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. பாமகவின் விருப்பத்தை அறிந்து அதன்பேரில் பேசவும் திமுக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.