சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால் பிப்.9-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்தனர்.
அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில தேர்தல் குழுவினருடன் தனித்தனியே பேசி, கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது, காங்கிரஸ் குறைந்தபட்சம் 3 தனி தொகுதிகளில் போட்டியிட வேண்டும். திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும் என்று பல நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர், காங்கிரஸின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர்.
திமுக தொகுதி பங்கீட்டு குழுதலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் கேட்டதாகவும், புதுச்சேரி உட்பட7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும், தங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி, அதன் விவரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது:
கே.எஸ்.அழகிரி: அகில இந்தியகாங்கிரஸ் தலைவர்கள் திமுகநிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடினர். முகுல்வாஸ்னிக் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிகவும்திருப்திகரமாக இருந்தது. மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகு விரைவில் பேசுவோம்.
முகுல் வாஸ்னிக்: மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கான முதல் கூட்டம் நடந்துள்ளது. புதுச்சேரி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டம் சுமுகமாக நடந்தது. இதில் மக்களாட்சிக்கு ஆபத்தானவற்றை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசித்தோம். தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் பேச இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் நடந்துவரும் நிகழ்வுகளை நாங்கள் எளிதில் கடந்து செல்கிறோம். இறுதியில், இண்டியா கூட்டணி வலுவாக உருவெடுக்கும். சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது: திமுக – காங்கிரஸ் இடையேஆரம்பகட்ட பேச்சுவார்த்தைதான் நடந்துள்ளது. மக்களவை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். திமுக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் எங்களிடம் இடம்தான் இல்லை.
நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையில் இருந்திருக்கிறார். கூட்டணிக்காக சகித்துக்கொண்டு இருந்தோம். இண்டியா கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.