Breaking News
Home / செய்திகள் / ‘காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி’ – நடிகர் ரஜினிகாந்த் @ லால் சலாம் இசை வெளியீட்டு விழா

‘காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி’ – நடிகர் ரஜினிகாந்த் @ லால் சலாம் இசை வெளியீட்டு விழா

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பேசி இருந்தார்.

“தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் என என்னை சொல்லும்படி சொன்னார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, தனது திறமையால், உழைப்பால் உயர்ந்து உள்ளார். நன்றாக நடித்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் ‘எனக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார். நானும் அதையே தான் சொல்கிறேன். அதனால் நடிகர் விஜய், எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி நினைத்தால் அது அவருக்கும் மரியாதை இல்லை.

தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், ‘காக்கா, கழுகு’ கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்” என்று பேசினார்.

மேடையில் பேசிய ரஜினிகாந்த், பாடகர் பவதாரிணியின் அகால மறைவுக்கு இரங்கலை தெரிவித்தார். தனது நண்பரும், மகளை இழந்து வாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் பேசினார். கடந்த டிசம்பரில் காலமான நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகள், கவுண்டமணி – செந்தில் உடனான படப்பிடிப்பு அனுபவங்கள், குட்டி கதைகள், தனது இரண்டு மகள்கள், லால் சலாம் உருவான விதம், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்தும் அவர் பேசி இருந்தார்.

இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

காக்கா, கழுகு கதை: கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வில் ‘காக்கா, கழுகு’ கதை குறித்து பேசி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து அது நடிகர் விஜய்யை குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், லியோ பட விழாவில் இது குறித்து பேசப்பட்டது. இந்த சூழலில் ரஜினிகாந்த் அதற்கு ‘லால் சலாம்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *