சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், இந்தியாவை வலிமையான நாடாக உயர்த்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், கோயம்பேட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் ஆணைய செயலர் த.ரத்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவித்தார்.
பல்வேறு துறைகள் சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 91 ஆயிரத்து 990 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 298 பேருக்குநற்சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.அனுசியாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அதன் மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் பங்கேற்று தேசிய கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வாரியத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலைகளை வழங்கி கவுரவித்தார்.
சிஎம்டிஏ சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அதன் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா பங்கேற்று தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அதன் மேலாண் இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் பங்கேற்று தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் வாரிய தலைமைப் பொறியாளர் வே.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மின் வாரியம் சார்பில், அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி பங்கேற்று தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பதிவாளர் மருத்துவர் ம.பா.அஸ்வத் நாராயணன், துறை தலைவர்கள், துணை பதிவாளர்கள், உதவி பதிவாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை போருரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தியாவை வலிமையான, ஒற்றுமையான மேம்பட்ட எல்லோருக்குமான நாடாக உயர்த்த பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மத்திய அரசு அலுவலகங்கள்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வங்கியின் மேலாண்மை இயக்குநர் அஜய்குமார் வத்ஸ்சவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
சென்னை, அண்ணா நகர்எண்ணெய், இயற்கை எரிவாயு(ஓஎன்ஜிசி) அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், காவிரி படுகை மேலாளர் சாந்தனு முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
அயனாவரம், ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தெற்கு ரயில்வேசென்னைக் கோட்ட மண்டல மேலாளர் பி.விஸ்வநாத் ஈரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.எல்.ஜெயின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, புற்றுநோய் அறக்கட்டளைக்கு இருசக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கினார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், நிறுவனத்தின் செயல் இயக்குநர் (பொறுப்பு) எஸ்.தனபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.சி.அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியதோடு, பூந்தளிர் என்ற பார்க்கையும் திறந்து வைத்தார்.
நந்தனம் பாதுகாப்பு துறை கணக்காயர் அலுவலகத்தில் நடைபெற்றவிழாவில் கணக்காயர் டி.ஜெயசீலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 150 அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருது வழங்கினார்.
சென்னை விமான நிலையத்தில் இயக்குநர் சி.வி.தீபக், விமான நிலைய தென்மண்டல செயல் இயக்குநர் எஸ்.ஜி.பணிக்கர் தேசியக் கொடியை ஏற்றினர்.